Wednesday, September 9, 2009

தாய்மொழியின் முக்கியத்துவம்.

எங்களின் சமகால மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள். இவர்களுக்கு இனவெறி மொழிவெறி ,சாதிவெறி மற்றும் மதவெறி உச்சந்தலையிலிருந்து உள்ளங்க்கால்வரைப் பிடித்து ஆட்டுகிறது.

ஒவ்வொருவருக்கும் அவர்களது தாய்மொழி மிகவும் முக்கியமானது. அதற்காக ஒருவன் தாய்மொழியை அடுத்தவர்மீது திணிப்பது எந்தவகை ஜனநாயகம் என்பதுதெரியவில்லை. இது எந்தவகை மனித உரிமையென்றும் தெரியவில்லை?

மொழித் திணிப்புப் போதாதென்று சில நாடுகளில் சிறுபான்மையோர் மீது கலாச்சாரத்திணிப்பையும் மேற்கொள்கின்றனர் . கலாச்சாரத் திணிப்பை ஏற்படுத்துவதன்வழி சிறுபான்மையோரை நாட்டைவிட்டு விரட்டுகின்றனர் அலது இவர்களது கலாசாரத்தை ஏற்றுக்கொளும்படி கட்டாயப் படுத்துகின்றனர். இது எந்தவகை ஜனநாயகம்?

கல்வியைப் பொறுத்தவரை பொதுவான ஒருமொழியை உலக அளவில் வைத்துக்கொண்டு , மற்ற காரியங்களுக்கு அவரவர் தங்களின் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுத்து பயிலலாம். அவரவர் தங்களின் இனத்தவரோடு உரையாட இலக்கியத்தைப் படைக்க தங்களின் தாய்மொழியைப் பயன்படுத்திக்கொள்ள இயலும். ஆனால் அப்படியெல்லாம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் இந்த மொழி வெறியர்கள்.

மொழியின் முதல் தேவையே தொடர்புக்காகத்தான். அந்தத் தொடபுமொழி உலகத்திற்கே பொதுவாக ஒருமொழியாக இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். இதைவிடுத்து நாட்டுக்கு ஒரு அதிகார மொழியைக் கட்டாயப்படுத்தி கற்கச் செய்து மற்றவர் வளர்ச்சியைத் தடுத்திடும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது ?

ஒரு மொழி ஓர் இனத்தின் ஜீவன் என்றால், ஜீவனை இழந்த உடல் அழுகி நாற்றமெடுத்து அழிந்துப் போவதைப்போல மொழியை இழந்த இனமும் அழிந்துதான் போகும். ஓர் இனம் இந்த பூமியில் அழியாமல் இருக்கவேண்டுமென்றால் அந்த இனத்தின் மொழி பேணப்படல் வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் அறிவுக்கும் காலத்திற்கும் ஒவ்வாத சட்டங்களை வைத்துக்கொண்டு பாம்பாட்டிக் காரனைப்போல் விளையாட்டுக் காட்டுகிறார்கள் . கேட்டால் மக்களைப் பாதுகாக்க மொழிவெறி சட்டங்கள் தேவை என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள். காட்டு மிராண்டித்தன மனப்போகிற்கு ஆட்சியாள நினைக்கும் சுயநலவாதிகளை என்னவென்று சொல்வது?

பல்லின மக்கள் வாழும் நாட்டில் மற்றவர்களின் தாய்மொழியில் தொடர்பு கொள்ள இயலாதவாறு தடுப்பது மொழியழிப்பு வேலையில்லையா? இது ஒரு பிரஜையின் சுதந்திரத்தை பறிப்பதாகாதா? ஒருவன் தன் தாய்மொழியில் அரசாங்கத்தோடு தொடர்புகொள்ள முடியவில்லையென்றால் அவன் உரிமையுள்ள மனிதனா?

பெரும்பான்மையோரோ அல்லது சிறுபான்மையோரோ முழு சுதந்திரத்தோடு வாழ்வதுதான் உரிமை வாழ்வாகும்; நீதியாகும். அந்தக் குறிக்கோள் வெற்றியடைய மக்களினத்தைக் கொண்டுசெல்லும் கல்விமுறையும் சட்டங்களும் இயற்றப்படல் வேண்டும் . அதைவிடுத்து இனவெறி மொழிவெறி மற்றும் மத வெறியைத் தூண்டிவிடுக்கொண்டு ஆட்சி செய்ய நினைக்கும் நாடு உயரிய இலக்கை வேகமாக எட்டிவிட இயலாது.

No comments:

Post a Comment