-முனைவர் ஆறு. நாகப்பன்
இந்தியர்களும் சீனர்களும் “பெண்டாதாங்”. இந்த நாட்டின் வந்தேறிகள். இவர்கள் சட்டப்படியான குடிமக்கள் என்றாலும் இந்த நாட்டின் பூமிபுத்ராக்கள் அல்லர், வந்தேறிகள் மட்டுமே. ஆகையால் பூமிபுத்ராக்களுக்கு நிகரான உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது. அடிப்படை வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடவும் கூடாது என்ற கருத்தை எதிர்கால மலேசியர் மனத்தில் பதியச் செய்யும் நீண்ட கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியே இண்டர்லோக் நாவல்.
இந்தியர், சீனர்களிடம் “வந்தேறிகள்” என்ற கருத்தைத் திணிக்கும் அதே சமயத்தில் மலாய்க்காரர்களிடம் மலாய் மேலாண்மை என்னும் கோட்பாடு ஊட்டப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் தீவிரமடைந்திருக்கும் இந்த மனோவியல் போர் இந்தியர், சீனர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் பூமிபுத்ராக்களுக்கு உடன்பாடான விளைவுகளையும் உருவாக்கி வருகிறது.
இதற்கான செயல்பாடுகள் நாடாளுமன்றம் முதல் தொடக்கப் பள்ளிகள் வரை திட்டமிட்டபடி நிறைவேறி வருகின்றன. நாடாளு மன்றத்தில் இந்திய, சீன உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் அமைச்சர்கள் மலாய்க்காரர் அல்லாதவர் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று கூறுகின்றனர்.
அம்னோ மாநாட்டில் மூத்த அமைச்சர் ஒருவர் கிரீசைத் தூக்கிக் காட்டி அதனை முத்தமிட்டு உறையில் இட்டது மலாய்க்காரர் அல்லாதார்க்கு எதிரான வெளிப்படையான போர்ப் பிரகடனம் என்றே கருத முடிகிறது.
பள்ளிகளில் மலாய்க்காரர் அல்லாத மாணவர்களைப் பார்த்து “அவரவர் தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய்விடுங்கள்” என்று சொல்லப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. நெகிரிசெம்பிலான், லுக்குட் இடைநிலைப்பள்ளியில் எஸ்.பி.எம். தேர்வின் முதல் நாள் தேர்வு விதிமுறைகளை விளக்கிக் கூறிய தலைமைத் தேர்வு கண்காணிப்பாளர் இந்திய மாணவர்களைப் பார்த்து “நான் சொன்னது விளங்கியதா, விளங்காவிட்டால் இந்தியாவுக்குப் போய்விடுங்கள்” என்று கூறியுள்ளார். அதேபோல் சீன மாணவர்களைப் பார்த்து உங்களுக்குப் புரியாவிட்டால் சீனாவுக்குப் போய்விடுங்கள் என்று கூறியுள்ளார்.
மற்ற மாணவர்களைப் போன்று இந்திய மாணவர்கள் குறும்புகளோ குற்றங்களோ செய்யும்போது அதற்கான தண்டனைகளாக இன இழிவுச் சொற்களால் திட்டுவதோடு செருப்பால் அடிப்பது போன்ற தண்டனைகளையும் கொடுக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த தேசிய சேவைப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இண்ட்ராப் போராட்டக் காட்சிகளைப் படமாகப் போட்டுக் காட்டி இவர்கள் இந்த நாட்டின் அமைதியைக் கெடுக்கும் தீவிரவாதிகள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. இதன் மூலம் இந்தியர்கள் கலகக்காரர்கள் என்ற கருத்து இளைய மலேசியர் அனைவரின் உள்ளத்திலும் புகட்டப்பட்டுள்ளது.
இப்படித் தொடரும் மனோவியல் போரின் ஒரு வியூகம்தான் இண்டர்லோக் நாவல். இந்தியரும் சீனரும் இந்த நாட்டின் வந்தேறிகள் என்ற கருத்தை ஒரே சமயத்தில் இளைய மலேசியர் அனைவர் உள்ளத்திலும் புகுத்துவதன் மூலம் பூமிபுத்ரா மாணவர்கள் மண்ணின் மைந்தர் என்னும் இன உணர்வை பெறுவார்கள். இந்திய, சீன மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் நாட்டைப் பறித்துக் கொள்ளக் கூடும் என்ற அச்சத்தை பூமிபுத்ராக்களிடம் உருவாக்குவதும் தங்கள் உரிமைகளைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வை அவர்களிடம் வளர்ப்பதும் இந்த நாவலின் அடிப்படை நோக்கமாய் உள்ளதைக் காண முடிகிறது.
இந்த நாவல் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது தொடர்ந்து பாடநூலாக இருக்கும் வாய்ப்புண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஐந்தாம் படிவத்தில் பயிலும் பல ஆயிரம் மாணவர்கள் இதனைப் படிப்பார்கள். ஐந்து ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் மாணவர்கள் இந்த நூலைப் படிக்க வேண்டியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். 2011 பொதுத் தேர்தலுக்குப் பிறகு வரும் அடுத்த பொதுத் தேர்தலின்போது இந்த நாவலைப் படித்த புதிய வாக்காளர்கள் மனநிலை எப்படி மாறியிருக்கும் என்று இப்போதே நம்மால் ஊகிக்க முடிகிறது அல்லவா?
கடந்த 2007 நவம்பர் 25 ஹிண்ட்ராப் போராட்டத்திற்குப் பின் பாரிசான் அரசு கடுமையான சோதனையை எதிர்கொண்டு வருகிறது. 2008 பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்த பின் அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தலில் பாரிசான் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றுவதில் ஏற்பட்டிருக்கும் தடைகளை எண்ணிப் பெரும் கலக்கத்தில் இருக்கிறது.
பாக்காதான் சீனர்களின் 80 விழுக்காட்டு ஆதரவையும் இந்தியர்களின் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் ஆதரவையும் பெற்றிருப்பதாக அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர். நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் கிராமப்புறத்து இந்திய, மலாய்க்காரர்களின் வாக்குகளால் மட்டுமே பாரிசான் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. பாக்காதான் தொடர்ந்து சீனர், இந்தியர்களின் வாக்குகளைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் பாரிசானின் வெற்றி வாய்ப்பு மலாய்க்கார்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது.
எனவே, மலாய்க்காரர்களில் இளம் வாக்காளர்களைக் கவரும் கட்டாயம் பாரிசானுக்கு ஏற்பட்டுள்ளது. மலாய்க்காரர் அல்லாத மாணவர்களும் இளைஞர்களும் பள்ளிகளில் உயர்கல்வி வாய்ப்பு, கல்வி நிதி போன்றவற்றில் புறக்கணிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளனர். எனவே இனியும் அவர்களின் ஆதரவைப் பாரிசானுக்கு எதிர்பார்ப்பது இயலாது என்பதைத் தெரிந்து கொண்டதால் அம்னோ அரசு மலாய் மாணவர்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் அதிரடித் திட்டமாக இண்டர்லோக் நாவலைக் களம் இறக்கியுள்ளது.
அம்னோ தலைவர்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பாஸ் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் மாநில சுல்தான்களின் ஆதரவை இதற்குக் கருவியாகப் பயன்படுத்துவதையும் கவனித்தால் மலாய்க்காரர்களின் ஒட்டுமொத்த ஆதரவைத் திரட்டுவதை முதல்நிலைத் தேர்தல் வியூகமாக அமைத்து அம்னோ செயல்பட்டு வருவதை உணர முடிகிறது.
இப்போது வரப்போகும் பொதுத்தேர்தலுக்குப் பயன்படாவிட்டாலும் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் புதிய வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சிக்கு இண்டர்லோக் கட்டாயம் துணை செய்யும். விவசாயத்தில் உடனே பயன் தரும் பயிர்களும் உண்டு, சில காலம் கழித்துப் பயன் தரும் பயிர்களும் உண்டு. இண்டர்லோக் சில காலம் கழித்து அம்னோவுக்குப் பயன் தரும் பயிராய் இருக்கும். இந்தியர், சீனர்கள் மீது திட்டமிட்டு அம்னோ தொடுத்திருக்கும் இந்த மனோவியல் போரினால் இது நிச்சயம் சாத்தியமாகும்.
No comments:
Post a Comment