இண்டர்லோக் நாவல் தொடர்பான விவாதத்தில் உத்துசான் மலேசியா முன் வைத்த கருத்தையும் அதை ஆதரித்துப் பேசியுள்ள இந்தியக் கல்வியாளர்கள் கருத்தையும் ஒரு சேர மறுக்க வேண்டியுள்ளது.
தென்னிந்தியர்களுக்குள் ஏன் இவ்வளவு சாதிச் சங்கங்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தென்னிந்தியர் வரலாற்றில் மட்டுமல்ல உலகத்தின் எந்த இனத்தின் வரலாற்றிலும் மக்கள் சில சமூகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது வெளிப்படை. நிலவுடைமை, ஆட்சியுடைமை உடையவர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்தியுள்ளனர். இரண்டும் இல்லாதவர்கள் பல்வேறு தந்திரங்களால் மற்ற எல்லாரையும் அடிமைப்படுத்தியுள்ளனர். இந்த உண்மை மலேசியா உட்பட தென்கிழக்காசியாவில் வாழ்ந்த மலாய் இனத்தினருக்கும் பொருந்தும்.
சிங்கப்பூரில் சர் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸுக்கு மொழிபெயர்ப்பாளராய் இருந்த முன்ஷி அப்துல்லா என்ற மலாய் எழுத்தாளர் ஜோகூர், கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் வாழ்ந்த மலாய்க்காரர்களைப் பற்றியும் அக்கால அரசர்களைப் பற்றியும் நேரில் கண்ட உண்மைகளை எழுதியுள்ளார். ஹிகாயாட் பெலாயாரான் முன்ஷி அப்துல்லா என்ற அந்த நூலில் அவர் சுட்டிக் காட்டிய பல விவரங்கள் இன்று யாராலும் பேசப்படுவதில்லை. அவர் சிங்கப்பூரில் வாழ்ந்ததால் மலாய் அரசர்களுக்கு விசுவாசம் இல்லாதவராக இருந்தார் என்றும் அதனால்தான் மலாய் மக்களையும் அரசர்களையும் அவரால் குறை சொல்லி எழுத முடிந்தது என்றும் முன்ஷி அப்துல்லா விமர்சிக்கப்பட்டார்.
இண்டர்லோக் நாவலை ஆதரித்துப் பேசும் இந்தியக் கல்வியாளர்கள் முன்ஷி அப்துல்லாவும் ஐரோப்பிய ஆய்வாளர்களும் மலாயர் வரலாற்றைப் பற்றி எழுதிய கறுப்பு வரிகளை விளக்கிப் பேச முடியுமா?
இந்தியாவில் பிராமணர் உருவாக்கிய வருணாசிரம கொள்கையை இந்தியாவுக்கு வந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலவாறாக விமர்சனம் செய்தனர். இவர்களில் கிருத்துவ சமயம் சார்ந்தவர்கள் இந்தச் சமூக ஏற்றத்தாழ்வை மத மாற்றத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்தியர் பற்றியும் தென்னிந்தியர் பற்றியும் இவர்கள் எழுதிய நூல்களை மேற்கோள்களாகப் போற்றி இந்தியரையும் தமிழரையும் நெடுங்காலமாய்ப் பலர் இழிவுபடுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நூல்களை மேற்கோளாகக் கொண்டுதான் இண்டர்லோக் நூலாசிரியர் தனது நூலை எழுதியிருக்க வேண்டும்.
உலகின் எல்லா இனத்தினருக்கும் தங்கள் வரலாற்றில் கறுப்புப் பகுதிகள் உள்ளன. ஆட்சி அதிகாரமும் அனைத்துலக ஆதரவும் கையில் வைத்திருப்பவர்கள் தங்கள் பழைய வரலாற்றை மறைத்தும் மாற்றியும் தங்கள் விருப்பம் போல் எழுதிக் கொள்ள முடியும். மலேசியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மலாயா வரலாறு படித்தவர்கள் இப்போது உள்ள வரலாற்றுப் பாட நூல்களை எடுத்துப் பார்த்தால் பல விவரங்கள் மாறிப் போயிருப்பதைச் சுட்டிக் காட்டுவர். வரலாற்றை மாற்ற முடியாது என்றாலும் காலத்தின் போக்கு கருதி சில பகுதிகளை மறைத்து வைப்பது எல்லா நாடுகளிலும் இனங்களிலும் இயல்பாய் உள்ளது. மலேசியாவிலும் இது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தியரிடையே காணப்படும் வருணாசிரமம், மற்றும் சாதி வேறுபாடுகள், கடந்த 1500 ஆண்டுகளாகத் திருமூலர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் காலந்தொட்டே தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஈ.வே. இராமசாமிப் பெரியார், அம்பேத்கார் போன்றோர் சாதியத்துக்கு எதிரான கடுமையான போரை நிகழ்த்தினர். என்றாலும் சாதியின் ஆணி வேர் இன்னமும் அழியவில்லை. நாலாந்தர அரசியல்வாதிகள் தோல்வியின் விளிம்புக்கு வந்துவிட்டபோது சாதியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இந்த அரசியல் போக்கு இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கும் பரவிவிட்டது.
மலேசியத் தென்னிந்தியர் மறுப்பதையும் மறக்க விரும்புவதையும் இண்டர்லோக் நாவல் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மலாய் இலக்கியங்களில் இந்தியர் இழிவுபடுத்தப்படுவது இது முதல் தடவையல்ல. கடந்த அறுபது ஆண்டுகளாகவே மலாய் எழுத்தாளர்கள் இதனைச் செய்து வருகின்றனர். இண்டர்லோக் பொது வாசிப்புக்கான ஒரு நூலாக இருந்தால் அது குறித்து இந்த அளவுக்குக் கொந்தளிக்க வேண்டி இருக்காது.
மாணவர்க்கு ஆகாது
இண்டர்லோக் நாவலை ஆதரித்துப் பேசுவோர் ஓர் உண்மையை மறந்துவிடுகின்றனர். வயதாலும் கல்வியாலும் முதிர்ச்சி அடைந்த மலேசியர் இண்டர்லோக் நாவலை வாசிக்கும்போது ஏற்படும் விளைவுக்கும் பதினாறு வயது பல இன மாணவர்கள் ஓர் அறையில் அமர்ந்து வாசிக்கும்போது ஏற்படும் விளைவுகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
இதனைப் படிக்கும் மலாய்க்கார மாணவர்கள் இந்திய மாணவர்களைக் கேலி செய்யும் வாய்ப்பு நிறைய உள்ளது. இதுதான் வரலாறு, இதுதான் ‘ரியலிடி’ என்று அவர்களிடம் சொல்ல முடியாது. பறையா என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதும் என்ன வரலாற்றுப் பின்னணி என்பதும் முக்கியமல்ல, அது என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். இங்கு இந்தியர்களை இழிவுபடுத்தும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
மலேசியாவில் வாழும் எல்லா இனத்தினரும் தத்தம் பண்பாடுகளைப் பேணுவதோடு தாம் மலேசியர் என்ற ஒரு நாட்டின் மக்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதே சத்து மலேசியாவின் உட்பொருளாய் இருக்க வேண்டும். இண்டர்லோக் சத்து மலேசியா கோட்பாட்டுக்கு எதிரானதாய் உள்ளது.
கடந்த காலங்களில் இந்திய மாணவர்கள் கெலிங் என்று அழைக்கப்பட்டனர். அப்படி அழைத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எதிராக இந்திய மாணவர்கள் கலவரம் செய்ததுண்டு. எல்லா இன மாணவர்களும் ஒரே பள்ளியில் படித்தால் ஒருமைப்பாடு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இடைநிலைப்பள்ளிகளில் இதுவரை நிறைவேறவில்லை. அதற்கான பல காரணங்களில் இப்படிப்பட்ட இன இழிவு சொற்களும் ஒரு காரணம். இனி கெலிங் என்ற சொல்லோடு பறையா என்ற சொல்லும் தாராளமாகப் பயன்படுத்தப்படும். இதனால் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் ஒற்றுமை சீர்குலையும். தொடர்ந்து இந்திய மாணவர்களிடம் ஏற்படப் போகும் மனோவியல் பாதிப்புகள் குறித்தும் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்தச் சொல்லினால் தாம் இழிவுபடுத்தப்படுவதாய் உணரும் மாணவர்கள் இந்த நூலைக் கருத்தூன்றிப் படிக்க இயலாது. இதனால் இந்நூலிலிருந்து எழுப்பப்படும் வினாக்களுக்கு அவர்களால் சரியாக விடையளிக்க முடியாது. இண்டர்லோக் மலாய் மொழிப் பாடத்தின் கட்டாய நூல் என்பதால் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
எனவே, இது தென்னிந்தியரின் வரலாறு, ரியலிடி என்று கதைக்காமல் உங்களுக்குள் ஏன் இவ்வளவு சாதிச் சங்கங்கள் என்று கேள்வி எழுப்பாமல் தேசிய ஒருமைப்பாடு, சத்து மலேசியா உணர்வு, மாணவர்களின் ஒற்றுமை, இந்திய மாணவர்களின் மனோவியல் பாதிப்பு ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து இந்த நூலை முற்றாகத் தடை செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் பாட நூல் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.
இண்டர்லோக்கை ஆதரிப்பவர்களில் எல்லோருமே “அந்த நாவலை முழுதும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் ; படிக்காமல் பேசாதீர்கள் ” என்கிறார்கள். நான் முழுதுமாய் படித்துவிட்டுத்தான் சொல்கிறேன், அது ” பெரியவர்களுக்கு மட்டுமானது! ” என்று அட்டையிலேயே எழுதப்படவேண்டிய புத்தகம். நாவலாசிரியர் 45 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாக கூறுகிறார். நாவல் போட்டியில் ஆறுதல் பரிசை வென்றதாகவும் கூறுகிறார். மிக அற்புதமான கருவை கையில் எடுத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும். இந்த நாவலைத் தாம் பள்ளிப்பிள்ளைகளுக்காக எழுதவில்லை , போட்டிக்காகத்தான் எழுதினேன் என்கிறார். ” மணியம் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சமூகத்தவர். கப்பலில் பெரும்பாலோர் இவரைப்போன்றவர்களாக இருந்ததால் கப்பல் பிரயாணத்தின்போது எந்த அசௌகரியமோ , தீண்டாமை கொடுமையோ நிகழ வாய்ப்பில்லாமல் போனது!” என்று நாகரிகமாக சொல்லியிருக்கலாம். இன்னும் நிறைய சொல்லலாம் . சீனர்களைப்பற்றிச் சொல்லும்போது, ” பன்றிகள் போல” என்று உவமானம் சொல்லி விளக்குவது காலத்திற்கு பொருத்தமான எழுத்தாகுமா? இதுபோன்ற கடுமையான வார்த்தைகள் உள்ளன. இந்த நாவலில் உள்ள எதையுமே மாற்றியமைக்க நூலாசிரியர் இந்த வயதிலும் ஒப்ப மறுக்கிறார். அவருடைய பிடிவாதம் எழுத்தாளனுக்கே உள்ள பிடிவாதம் என்பதால் எனக்கும் பிடித்திருக்கிறது. “பள்ளிப் பிள்ளைகளுக்காக” என்று வரும்போது அவர் சிந்திக்கவேண்டும். பள்ளிப் பிள்ளைகளுக்காக தம்முடைய நாவலை மாற்றியமைக்க முடியாதென்றால் அவருடைய இண்டர்லோக் நாவலைக் கல்வியமைச்சு திரும்பப் பெற்றுக்கொள்வதுதான் சிறந்த முடிவாகும்!