Tuesday, January 18, 2011

சுதந்திர மலேசியாவின் நிரந்தர அடிமைகள்

(- முனைவர் நாகப்பன் ஆறுமுகம்) இன்றைய மலேசியாவின் அழகான கோபுரங்களுக்கு அடித்தளமாக இருந்தது தோட்டத் தொழில்தான். தொடக்கக் காலத்தில் தேயிலை, கரும்பும் பின்னர் ரப்பர், எண்ணெய்பனையும் இந்த நாட்டின் முகவரிகளாக அமைந்தன.

மலாய் ஆட்சியாளரிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் இந்த மண்ணை இலவசமாகப் பெற்றுக் கொண்ட பிரிட்டீஷ் காலனித்துவவாதிகள் ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழரை “இறக்குமதி” செய்து காடுகளைக் கழனிகளாக மாற்றினர். வந்தவர்களில் செத்தவர்கள் போக மற்றவர்கள் சாகும்வரை எலும்பு தேய உழைத்தனர். ஏற்றுமதி செய்யப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்கள் பயனீட்டுப் பொருள்களாக மாறி உலகெங்கும் பரவின. ஐரோப்பிய “கம்பெனிகள்” வளம் பெற்றன. ஆனால் தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழர் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இனியும் குனிய முடியாது என்ற நிலை வந்தபோது தோட்டத் தொழிலாளரில் சிலர் நிமிரத் தொடங்கினர். உரிமைக் குரல் சன்னமாகத் தொடங்கி வெடித்து வீரிட்டது. 1941இல் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 20,000 தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

அந்தக் கோரிக்கைகள்

1. ஒரே மாதிரியான வேலை செய்யும் சீன, இந்தியத் தொழிலாளர்களுக்குச் சமமான சம்பளம் தர வேண்டும். அப்போது தமிழர் பெற்ற நாள் சம்பளம் 55 காசு. சீனர் பெற்றது 85 காசு.

2. தோட்டப் புறங்களில் தமிழ்த் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் கிராணிமார்களாக இருந்தவர்கள் மலையாளிகளும் யாழ்ப்பாணத் தமிழர்களும். இவர்களுக்குப் பதிலாகத் தமிழரே கிராணிமார்களாக வர வேண்டும்.

3. ஐரோப்பிய துரைகளும் இந்தியக் கிராணிமார்களும் தமிழ்ப் பெண்களிடம் புரியும் பாலியல் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும்.

4. தோட்டப் புறக் குழந்தைகளுக்குக் கல்வி வசதி வேண்டும்.

5. ஐரோப்பியத் துரைகளும் இந்தியக் கிராணிகளும் எதிரில் வரும்போது சைக்கிளை விட்டு இறங்காமல் போவதற்குத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு உரிமை வேண்டும்.

6. 12 மணி நேர வேலை முறையைக் குறைத்து 8 மணி நேர வேலைமுறை வர வேண்டும்.

7. தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதி வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளோடு ஐந்து ஆண்டுகள் போராட்டம் நடந்தது. 1941,ல் வேலை நிறுத்தமும் நடைபெற்றது. விளைவு ஐந்து காசு சம்பள உயர்வு. வேறு எந்த மாற்றமும் வரவில்லை.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அப்போது பிரிட்டீஷ் காலனித்துவத்துக்கு எதிராகக் கம்யூனிஸ்டுகள் கொரிலாப் போர் நடத்திக் கொண்டிருந்தனர். தோட்டத் தொழிலாளருக்கான போராட்டம் கம்யூனிஸ்டு போராட்டமாகத் திரிக்கப்பட்டது. 1948இல் அவசர காலம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இராணுவத்தினர் களம் இறங்கிப் போராளிகளைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். தொழிற்சங்கத் தலைவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டனர். இவர்களில் மலாயா பொது தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.எ.கணபதி புடு சிறையில் தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் என்ற மற்றொரு போராட்டவாதி சுடப்பட்டார்.

இவ்வாறு தோட்டத் தொழிலாளர் போராட்டம் ஒடுக்கப்பட்டது. மீண்டும் அதே அடிமைத்தனத்தின் அடித்தளத்தில் அவர்கள் வாழ்க்கை தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது.

இன்று

நாடு முழுவதும் செம்பனைத் தோட்டத் தொழிலாளர் மாதச் சம்பளம் கோரி கடந்த 27 மாதங்களாகப் போராடினர். தொழிலியல் நீதிமன்றம் நேற்று (14 டிசம்பர் 2010) வழங்கிய தீர்ப்பில் மாதச்சம்பளக் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. நாள்படி 1.35 காசிலிருந்து 1.60 காசாக 25 காசு உயர்த்தப்பட்டது. இது வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு நாளைக்கும் வழங்கப்படும். மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்தால் ஏறத்தாழ 300 ரிங்கிட் மட்டுமே ஊதியமாகப் பெற முடிகிறது.

தோட்டப் புறங்களில் இந்தோனேசியத் தொழிலாளர்களும் குத்தகையில் வேலை செய்யும் வங்காள தேசிகளும் இதைவிடக் குறைந்த வருமானத்தில் வேலை செய்யத் தயாரய் இருப்பதால் தலைமுறை தலைமுறையாகத் தோட்டத்தில் வேலை செய்து வந்த இந்தியர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

நாடு விடுதலை அடைந்து 54 ஆண்டுகள் ஆன பின்னும் தோட்டத் தொழிலாளர் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நாடு முன்னேறிவிட்டது. தோட்டங்களை விழுங்கிக் கொண்டு மேம்பாட்டுத் திட்டங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. விவசாயத் துறையை மலேசிய அரசு பின்னுக்குத் தள்ளி தொழிற்துறையை அந்த இடத்தில் வைத்துவிட்டது. விவசாயத் துறை அலட்சியப்படுத்தப்பட்டது போல் அதனைச் சார்ந்த மக்களும் முற்றிலும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் பல ஆண்டுகளாக மாதச் சம்பளம் கேட்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறது. பிள்ளையைக் கிள்ளுவதும் தொட்டிலை ஆட்டுவதுமாக இந்தச் சங்கம் தொழிலாளர் முதலாளி இரண்டுக்கும் நடுவே நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையில் வீட்டுப் பணிப் பெண்களுக்கும் காவலர்களுக்கும் மாதச்சம்பளம் கொடுக்க முயற்சி செய்து வரும் மனித வள அமைச்சர் தோட்டத் தொழிலாளர் பற்றி வாய் திறக்கவில்லை.

இன்று உள்நாட்டுத் துரைகளே மிகப் பெரிய தோட்டங்களின் முதலாளிகள் ஆகியுள்ளனர். பிரிட்டீஷ்காரர்களிடமிருந்து நாட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்ட இந்த உள்நாட்டுத் துரைகள் நவீன காலனித்துவவாதிகளாக பழைய அடிமை முறையைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

தொழிற்சாலைகளில் 700 ரிங்கிட்டுக்கும் குறையாத ஊதியம் பெறும் அடிநிலைத் தொழிலாளரைக் காட்டிலும் தோட்டப்புறத் தொழிலாளர்கள் மோசமான வருவாயைப் பெறுகின்றனர். மோசமான வீட்டு வசதி, சுற்றுச்சூழல், வறுமை போன்றவற்றுக்கு நடுவே பிறந்து வளரும் பிள்ளைகள் போதுமான கல்வி அறிவும் வழிகாட்டலும் இல்லாமல் வெகு விரைவில் சமூகச் சீர்கேடுகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

நகர்ப்புறங்களின் புறம்போக்குப் பகுதிகளும் தோட்டப்புறங்களும் தமிழர் குழுமி வாழும் பகுதிகளாக இருக்கின்றன. வறுமைக் கோட்டைக் கடக்க முடியாத இவர்களிலிருந்து உற்பத்தியாகி வளரும் இளம் தலைமுறையினர் “ஒரே மலேசியாவுக்குள்” நுழைவது எப்படிச் சாத்தியமாகும்?

தோட்டப்புறங்கள் தனியார் நிறுவனங்கள். அங்கே நடக்கும் எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல என்று அம்னோ அரசு கண்ணை மூடிக் கொள்கிறது. தேர்தல் காலத்தில் மட்டும் வாக்கு கேட்கப் போகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் போடும் ஆட்டுக்கறி சாப்பாட்டுக்கு அப்பால் நிரந்தரமாக இவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்குரிய திட்டங்கள் எங்கே?

வறுமை மற்றெல்லாச் சீர்கேடுகளுக்கும் தாய். தோட்டப்புறத் தமிழர் இந்த வறுமையின் குழந்தைகளாக இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும்? சுதந்திர மலேசியாவின் நிரந்தர அடிமைகளா இவர்கள்?

(மலேசியா இன்று)

About the Author

Admin has written 895 stories on this site.

jegaveeraphandian wrote on 19 January, 2011, 14:57

எது எதற்கோ சங்கம் அமைத்து விழா எடுக்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். இந்த மண்ணில் நமக்காகப் போராடி குற்றவாளியாக்கப்பட்டு நீதிக்காக உயிர்நீத்த தியாகச்சுடர்களாம் வீரசேனன், எஸ். எ . கணபதி போன்ற வீரத் திலகங்களுக்கு உரிய மரியாதையை மலேசியத் தமிழர்கள் கொடுக்கவில்லையே என்று நினைக்கும்போது உள்ளம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
சினிமா நடிகர்களுக்கும் போலி அரசியல்வாதிகளுக்கும் செய்யும் மரியாதையில் நாம் மதிமயங்கிக் கிடக்கிறோம்; ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் நமக்காகச் செத்துமறைந்தவர்களுக்கு எதுவும் செய்யாமல் நன்றி இல்லாதவர்களாய் இருக்கிறோமே என்னே கொடுமையையா!
நிலைமை இப்படியே தொடருமானால் பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல நம்மவருக்குத் தொண்டுசெய்ய எந்த நல்ல மனிதரும் இல்லாமலே போய்விடுவார்கள் என்பது உண்மையாகிவிடும்! போலிகள் மிகுந்த ஆராவாரத்துடனும் ஆற்பாட்டத்துடனும் தமிழ்ச் சமுதாயத்தைக் கொள்ளையடிக்கப் புறப்படுவார்கள். இப்போதே அதை நாம் கண்ணாரக் காண்கிறோமே..! வாழ்க தமிழினம்!

No comments:

Post a Comment